வாடிப்பட்டி பகுதியில் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பெரியார் பாசன கால்வாய் மூலம் வாடிப்பட்டி அலங்காநல்லூர் முதல் கள்ளந்திரி வரை விவசாயத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது
இந்த நிலையில், வாடிப்பட்டி பகுதியில் பெரியார் பாசன கால்வாய் மூலம் விவசாயப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பெரியார் பாசன கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் போதிய அளவு கிடைக்காத நிலையில், விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து நெல் நடவு செய்யும் பணிகளை தற்போது துவக்கி உள்ளனர்.
இந்த பகுதியில், உள்ள சுமார் 2000 ஏக்கர் நெல் விவசாய நிலங்கள் இந்த பகுதியில் உள்ள வடகரை கண்மாய், தென்கரை கண்மாய் மற்றும் ஆங்காங்கே கிராமப்புறங்களில் உள்ள கண்மாய்களில் தேக்கப்படும் தண்ணீர் மூலமாக விவசாயம் செய்யப்படும் நிலையில் தற்போது பெரியார் பாசன கால்வாயில் வரும் குறைந்த அளவு தண்ணீரால் பல இடங்களில் கண்மாய் நிரம்பாமல் வறட்சியாக காணப்படுகிறது.
இந்த நிலையில், வாடிப்பட்டி பகுதியில் பெரியார் பாசன கால்வாய் மூலம் நெல் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு பணிகள் தற்போது தொடங்கப்பட்டு வருகிறது.
சோழவந்தான் பசும்பொன் நகர் மற்றும் வாடிப்பட்டி ரோடு பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏக்கரில் கிணற்று பாசன மூலம் நெல் நடவு பணிகள் நடைபெற்றது. இயந்திரங்கள் மூலம் தற்போது நாற்றுப் பிடுங்கி நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் சமயத்தில் நடவுப் பணிகளை நம்பி தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நடத்தி வரும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு பெண் விவசாய கூலி ஆட்கள் மூலம் நெல் நடவு பணிகள் நடைபெற்றது .
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டு பிடுங்கி நடவு செய்த நிகழ்வு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட காலத்திற்கு பின்பு பெண் தொழிலாளர்கள் மூலம் நடவு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வைகை அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், அறுவடை வரை தேவையான அளவு தண்ணீரை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




