Close
நவம்பர் 26, 2026 9:09 மணி

அரசியல் அதிகாரத்தின் முன்னால் தளராத மனவலிமை: பெண் ஐஏஎஸ் அதிகாரியின் துணிச்சல் பயணம்

அச்சத்தையும் தயக்கத்தையும் கடந்து, நிதானமும் உறுதியும் கொண்டு ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி மேற்கொண்ட நடவடிக்கைகள், நிர்வாகச் சூழலில் நிலவும் அதிகார அழுத்தங்களுக்கு எதிரான ஒரு முக்கிய விவாதத்தை உருவாக்கியுள்ளன. உணர்ச்சிவசப்படாமல், சட்டத்தின் பாதையில் அவர் எடுத்த ஒவ்வொரு அடியும் பலருக்கும் முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது.
சம்பவத்தின் விவரங்களை மீண்டும் மீண்டும் விவாதித்து யாருடைய மனதையும் புண்படுத்துவதை விட, கடுமையான நெருக்கடிகளை ஒரு பெண் அதிகாரி எவ்வாறு சட்டப்பூர்வமாகவும் அமைதியாகவும் எதிர்கொண்டார் என்பதைப் புரிந்துகொள்வதே இன்றைய தேவையாக உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் உலகளவில் மிகவும் சவாலான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இத்துறைக்குள் நுழைவதற்கான தயாரிப்பே மிகப்பெரிய மனஉறுதியையும் தொடர் உழைப்பையும் கோருகிறது.
பயிற்சிக் காலத்தில் அதிகாரிகளுக்கு, இக்கட்டான சூழல்களிலும் நிதானம் காக்கும் மனத் திடம்,  பண்பு, நாகரிகம், இரக்கம் மற்றும் நிர்வாகத் திறன், முடிவெடுக்கும் ஆற்றல் மற்றும் எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும் தன்மை,  உணர்ச்சிகளுக்கு அடிபணியாமல் அறிவுப்பூர்வமாகவும் சட்டபூர்வமாகவும் அணுகும் அணுகுமுறை ஆகியவை வளர்க்கப்படுகின்றன.
குடியரசுத் தலைவரின் நியமன ஆணையுடன் உயர் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் அதிகாரிகள், சட்டத்தின் எல்லைக்குள் நின்று பொதுநலனைக் காக்கும் கடமையைச் சுமக்கின்றனர்.
சில சமயங்களில் ஜனநாயக அமைப்புக்குள் அதிகாரத் திமிரும், அழுத்தங்களும் தலைதூக்குவது நிர்வாகத்தின் ஆரோக்கியத்திற்குச் சவாலாக அமைகிறது. அத்தகைய சூழலில், உயர் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஒரு பெண் அதிகாரி தனிப்பட்ட வாழ்வில் கடும் மன உளைச்சல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சூழலில் அவர் கையாண்ட அணுகுமுறை பலரையும் கவனிக்க வைத்துள்ளது. பொதுவெளியில் வீண் வார்த்தைகளைத் தவிர்த்து, அமைதியையும் நிதானத்தையும் காத்தது, தனது பதவியின் அதிகார எல்லைகளை மீறாமல் சட்டரீதியான வழிமுறைகளைப் பின்பற்றியது, சமரசங்களுக்கும், இடமாற்றம் போன்ற ஆலோசனைகளுக்கும் பணிந்து போகாமல், நீதி கிடைக்கும் வரை உறுதியாக நின்றது.
“எனக்கே நீதி கிடைக்காவிட்டால், சாதாரண மக்களுக்கு எப்படி நீதி வழங்க முடியும்?” என்ற கேள்வியுடன் அவர் காட்டிய உறுதி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் குரலாக மாறியது.
சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, குற்றவாளிகளைக் காப்பாற்றவோ சமரசம் செய்யவோ முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. உயர் நிர்வாகப் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்படுகிறது என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற நீதிமன்றத்தின் கவனை, அதிகார அழுத்தங்களின் யதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
உச்ச அதிகார அமைப்புகளும் சட்டமும் இவ்விவகாரத்தைக் கவனித்து வரும் நிலையில், நீதி நிதானமாகவும் உறுதியாகவும் தன் கடமையைச் செய்யும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. அநீதிகளின் முன்னால் மௌனமாக உடைந்து போகாமல், சட்டம் மற்றும் மனவலிமையின் துணை கொண்டு நின்ற இந்தப் பெண் அதிகாரியின் துணிவு, நீண்டகாலம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top