Close
நவம்பர் 26, 2026 5:25 மணி

ராமர் கோவில் நன்கொடை கணக்குகளை பகிரங்கப்படுத்த வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

ராமர் கோவில் நன்கொடை தொகையில் கோவில் கட்டுமானம், நிர்வாகம் மற்றும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் அனைத்திலும் பாஜ, ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஎச்பி அமைப்புகளின் உறுப்பினர்களே பொறுப்பில் இருந்ததால், இந்த நிதி கையாடலுக்கு அவர்கள் பொறுப்பேற்காமல் தப்ப முடியாது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்

ராமர் கோவில் நிதி தொடர்பான அனைத்து கணக்குகளையும் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும், விசாரணை வரம்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் காங் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகத் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், “அயோத்தி ராமர் கோவிலில் அறக்கட்டளை அமைப்பு முதல் கட்டுமானம், நன்கொடை சேகரிப்பு, உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மற்றும் வங்கியில் வைப்பு செய்வது வரை அனைத்து நிலைகளிலும் பாஜ, ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஎச்பி உறுப்பினர்களே பொறுப்பில் இருந்தனர். அப்படி இருக்கையில், காணிக்கை திருட்டுக்கு அவர்கள் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது..

மேலும், 2021ம் ஆண்டிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் கணக்கு அலுவலர் மகிபால் சிங் காணிக்கை கையாடலைச் சுட்டிக்காட்டினார். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவரே பணியிலிருந்து நீக்கப்பட்டார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அறக்கட்டளை நிர்வாகிகளான சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோரின் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், 2021லேயே இந்தத் திருட்டு குறித்து சம்பத் ராய் மற்றும் கோபால் ராவ் ஆகியோருக்குத் தெரிந்திருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?

கோவில் கட்டுமானப் பணிய மேற்பார்வையிட்ட இஞ்சினியர் தீனநாத் வர்மா, 40 சதவீத கமிஷன் கேட்கப்பட்டதாக ஆதாரத்துடன் புகார் அளித்தபோதும் அவரே பணியிலிருந்து நீக்கப்பட்டார். இத்தகைய தீவிரக் குற்றச்சாட்டுகள் இருந்தும் சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்படாமல் சாட்சிகளாக சேர்க்கப்பட்டது எப்படி? என்று ஜெய்ராம் ரமேஷ் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சிறப்பு விசாரணைக்கு குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள குற்றவாளிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். உண்டியல் அறையின் சாவியை தகுதியற்ற நபர்களிடம் ஒப்படைத்த சுபாஷ் ஸ்ரீவஸ்தவா என்பவர் தனது வீட்டில் ஆர்.எஸ்.எஸ் கிளையை நடத்தி வந்தவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் மௌனம் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, ராமரின் பெயரால் பெறப்பட்ட ஒவ்வொரு பைசா நன்கொடைக்கும் உரிய கணக்கு நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top