தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கும், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கும் தங்களது முழு ஆதரவை அளித்துள்ள 124 முன்னாள் ஐஏஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் ஆதாரமற்ற வாக்கு மோசடிக் குற்றச்சாட்டுகள் பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என எச்சரித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் இவிஎம் இயந்திரங்களைப் பாதுகாக்கும் பணிகளில் தங்களது பணிக்காலத்தைச் செலவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரிகள், தங்களது கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நாங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. தகுந்த ஆதாரங்கள் எதுவுமின்றி ‘மோசடி’ என்ற வார்த்தையைத் தேர்தல்கள் மீது வீசுவது, நமது ஜனநாயக நம்பிக்கையைக் காயப்படுத்துகிறது. முறைகேடான தேர்தல் எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். வன்முறையும் வாக்குச்சாவடி கைப்பற்றலும் நடந்த காலங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
ஒரு காலத்தில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவதற்குப் பெயர் பெற்ற பீகார், 2025 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மறுவாக்குப்பதிவு கூட இல்லாமல் தேர்தலை நடத்தியது. 1951-க்குப் பிறகு மிக அதிக அளவிலான வாக்குப்பதிவும், பெண்களின் சாதனை அளவிலான பங்கேற்பும் அங்கு பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையம் உருவாக்கிய வெளிப்படையான அமைப்பே இதற்குக் காரணம்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அனைத்துக் கட்சி முகவர்களும் கண்காணிக்கின்றனர். இயந்திரங்கள் முகவர்களின் கையொப்பத்துடன் முத்திரையிடப்பட்டு, பலத்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படுகின்றன. விவிபாட் சீட்டுகள் இயந்திர வாக்கு எண்ணிக்கையுடன் ஒப்பிடப்படுகின்றன. பெருமளவிலான தேர்தல் முறைகேடு நடக்க வேண்டுமென்றால், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அதிகாரிகளும், தோற்கும் கட்சிகளின் முகவர்களும் மௌனமாக இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய சதித்திட்டம் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
எந்தவொரு தனிநபரும் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது என்பதற்காகவே 1995-ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டது. மூன்று தேர்தல் ஆணையர்கள் இணைந்து முடிவெடுப்பது ஒருதலைப்பட்சமான செயல்பாட்டைத் தடுக்கிறது என்று கூறியுள்ளனர்
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், நீங்கள் வெற்றிபெறும்போது ஒரு அமைப்பு நேர்மையாகவும், தோல்வியடையும்போது முறைகேடாகவும் இருக்க முடியாது. நீங்கள் முறைகேடு என்று கூறும் இதே அமைப்புதான் உங்களுக்கும் வெற்றிகளைப் பெற்றுத் தந்தது என்றால், நீங்கள் அந்த அமைப்பைச் சந்தேகிக்கிறீர்களா அல்லது அதன் முடிவையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
தேர்தல் முறையின் மூலம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட பிறகு, தங்களுக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கண்டறிவதற்காகவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகவும் அந்த முன்னாள் அதிகாரிகள் தங்களது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்த முயன்ற நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டில்லி காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் மற்றும் மாணிக் சர்க்கார் ஆகியோர் அடங்குவர்.
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்தும், அரசியல் கட்சிகளின் தொடர் போராட்டங்கள் குறித்தும் நாடு முழுவதும் விவாதங்கள் சூடுபிடித்துள்ள வேளையில், இத்தகைய ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளின் வெளிப்படையான ஆதரவு இச்சூழ்நிலையில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.




