நாமக்கல்லில் உள்ள எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக, 150க்கும் மேற்பட்ட டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடக, புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக, சுமார் 4,500 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கேஸை சிலிண்டர்களில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் தலைவராக சுந்தர்ராஜன் இருந்து வருகிறார். இவர் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும். கடந்த சில மாதமாக சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தியும் இதுவரை கூட்டத்தை கூட்டவில்லை என குற்றம் சாட்டி, எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள சங்க அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




