நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதியில் ரூ. 46.06 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டி அருகே, அவுட்டர் ரிங் ரோட்டில் ரூ. 44.17 கோடி மதிப்பீட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைவில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, சேந்தமங்கலம் தாலுகா, வாழவந்திகோம்பையில் நபார்டு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம்புதூர் முதல் புதுக்கோம்பை – பள்ளம்பாறை வரை ரூ. 1.46 கோடி மதிப்பீட்டிலும், தொல்குடி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம்புதூர் முதல் புதுக்கோம்பை வாழக்காட்டான் கோயில் வரை ரூ. 43.20 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும், ரோடு பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு, அளவீட்டுக் கருவிகள் கொண்டு சாலையின் தரம், அகலம் மற்றும் கனபரிமாணங்களை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அப்பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
கொல்லிமலை வட்டாரம் பைல்நாடு ஊராட்சி, கீழ்செங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அவர் கலந்துரையாடியானர்.




