Close
அக்டோபர் 18, 2026 11:23 காலை

தீபத் திருவிழா ஏற்பாடுகள், அமைச்சர்கள் திடீர் ஆய்வு: பத்திரிகையாளர்கள் இடையே வாக்குவாதம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வருகிற நவம்பர் 15 ஆம் தேதியில் தீபத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷுடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகப் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா தமிழகத்தின் முக்கிய ஆன்மீக விழாக்களில் ஒன்றாகும். அதனை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு அரசும் கோயில் நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  ரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தூய்மைப் பணிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

கோயில் சுற்றுவட்டாரச் சாலைகள், மாட வீதிகள் ஆகியவற்றில் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு தண்ணீர், உணவு, மருத்துவ உதவி, கழிப்பறை வசதிகள் போன்றவை போதுமான அளவில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் இந்த ஆய்வின்போது அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் விழா முழுமையாக வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினர். பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை விரைவுபடுத்தவும், தேவையான இடங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டனர்.

யானைக்கு பெயர் சூட்டிய அமைச்சர்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அசாமில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹிராலால் யானைக்கு அமைச்சர்கள் இணைந்து நமச்சிவாய என பெயர் சூட்டினர். தொடர்ந்து யானை பாகனிடம் யானைக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், போளுா் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், காவல்துறை தலைவர் வடக்கு மண்டலம் பிரவீன் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உதயகுமார்,  திருக்கோயில் இணைஆணையர் பரணிதரன் , மேலாளர் செந்தில் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

பத்திரிகையாளர்கள் வாக்குவாதம்

இந்த நிலையில், ஆய்வின்போது கோயிலுக்குள் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர்கள் கூறியதால் அமைச்சர்களுடன் பத்திரிகையாளர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆய்வுக்காக அமைச்சர்களுடன் 10 பேர் வரையில் கோயிலுக்குள் சென்றதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர். அதுமட்டுமின்றி, ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் ஒருவர் இஸ்லாம் மதத்தின் தொப்பியை அணிந்து உள்ளே சென்றதாகவும், மத அடிப்படையில் எவ்வாறு உள்ளே செல்லலாம் என்றும் கோயில் நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பினர்.

கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம்; ஆனால், வேறு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் செல்லக் கூடாது என்றும் கூறினர். அதனைத் தொடர்ந்து அவர், தொப்பியைக் கழற்றிவிட்டு ஆய்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பங்கேற்றார். அமைச்சர்களுடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்ததால் கோயில் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கோயிலில் தங்கள் மத அடையாளமான தொப்பி அணிந்த இஸ்லாமியரை அழைத்துச் சென்ற இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி (30 ஜனவரி 2024) கொடிமரம்/துவஜஸ்தம்பம் தாண்டி இந்துக்கள் அல்லாதவர்களுக்கு நுழைய அனுமதி இல்லை. ஒரு வேளை, இந்து அல்லாத ஒருவர் வழிபட விரும்பினால், தனக்கு அந்தக் கடவுளின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், இந்து கலாச்சாரம் மற்றும் கோவிலின் விதிகளைப் பின்பற்றுவதாகவும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்பதோடு அந்தக் கோவிலின் பதிவேட்டில் பதிய வேண்டும் எனத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த இஸ்லாமியர் சட்டப்படி இந்து கடவுளை ஏற்றுக்கொள்கிறேன் என்ற உறுதிமொழியை எழுதிக் கொடுத்தாரா? இதே போன்று மற்ற வழிபாட்டுத் தளங்களில் நடைபெற்றால் அந்த விதிகளை மீறுவார்களா அமைச்சர்கள்? ஐயோ! சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கிறார்களே என்று பொங்கியெழுவார்களே தமிழக அரசியல்வாதிகள்? சட்டத்தை மதிக்காத அமைச்சர்கள் எப்படி சட்டத்தை அமல்படுத்துவார்கள்? எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top