Close
அக்டோபர் 7, 2026 8:41 மணி

அண்ணாமலையார் கோவிலில் அபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்: இணை ஆணையர் உத்தரவு

சிவாச்சாரியார்களுடன் ஆலோசனை மேற்கொண்ட இணை ஆணையர் பரணிதரன்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு மருத்துவ உடல் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன் உத்தரவிட்டுள்ளாா்.

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீபத்திருவிழா வரும் நவம்பா் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நவம்பா் 24-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் சிறப்பு நாள்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தீபத் திருவிழா தொடா்பாக கோயில் வளாகத்தில் கோயில் இணை ஆணையா் பரணிதரன் தலைமையில், சிவாச்சாரியா்கள், உதவி ஆணையர் பாலசுப்பிரமணி, மேலாளர் செந்தில், கோயில் ஊழியா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இணை ஆணையா் பரணிதரன் பேசியதாவது:

கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாட்களில் சாமி உற்சவத்திற்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு குறித்த நேரத்தில் சாமி சாமி புறப்பாடு நடைபெற வேண்டும். கோவிலில் பூ அலங்காரங்கள் சிறப்பான முறையில் இருக்க வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து சாமி புறப்பாடு குறித்த நேரத்தில் நடைபெற வேண்டும். பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம். பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் குறித்த நேரத்தில் புறப்பட்டு விரைந்து மாட வீதிகளில் உலா வர அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சியின் போது கோவில் பணியாளர்களுடன் சிவாச்சாரியார்களும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: தற்போது, வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் பக்தா்கள் வருகை அதிகரித்து வருவதால், சுவாமி தரிசனத்துக்கு 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. வயதானவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது,

இதனை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து வரும் வாரங்களில் இருந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூலவர் அபிஷேகத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. வழக்கம்போல் சாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் நடைபெறும். ஆன்லைன் புக்கிங் கிடையாது.

மற்ற நாட்களில் அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் விருப்பம் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு முன்பு கோவிலுக்குள் வந்து கோவிலில் உள்ள மருத்துவ முகாமில் உடற்தகுதி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

மேலும் கருவறையில் அமர்ந்து சாமி, அம்மன் அபிஷேகத்தை காணக்கூடிய பக்தர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்களை அபிஷேகத்தில் கடைசியாக தான் அமர வைக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் பணியாளர்களுடன் சிவாச்சாரியார்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top