நாமக்கல் மாநகராட்சி சார்பில், குப்பைகளை 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற கோலப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், நாமக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் சிறப்புக் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு கோலப்போட்டி, முல்லை நகர் ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது.
50-க்கும் மேற்பட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, குப்பைகளைத் தரம் பிரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர்.
மக்கும் குப்பைகளான காய்கறிக் கழிவுகள், பழத்தோல்கள் மற்றும் உணவுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து உரமாக மாற்ற முடியும். மக்காத கழிவுகளான பிளாஸ்டிக், காகிதம் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைத் தனியாகப் பிரித்து மறுசுழற்சிக்குப் பயன்படுத்தலாம். சுகாதாரக் கழிவுகள் மற்றும் சிறப்புக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் தனித்தனியாகச் சேகரித்து உரிய வழிமுறைகளின்படி அகற்றுவது அவசியமாகும்.
இவ்வாறு வீடுகளிலேயே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதன் மூலம் குப்பைகள் ஒன்றுடன் ஒன்று கலப்பது தவிர்க்கப்படுவதுடன், மறுசுழற்சி மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளும் எளிதாகின்றன என்பதை விளக்கி இந்த கோலப்போட்டி ந டத்தப்பட்டது.
கோலப் போட்டியில் சிறப்பாக கோலம் வரைந்த கொசவம்பட்டியைச் சேர்ந்த கனகா என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. நல்லிபாளையம் கலையரசி, வசந்தபுரம் பிரியதர்ஷினி, அபிராமி ஆகியோருக்கு 2ம் பரிசும், கொண்டிசெட்டிபட்டியைச் சேர்ந்த மதுமதி, வேட்டாம்பாடி ப்ரீத்தா மற்றும் ரஞ்சிதா ஆகியோருக்கு 3ம் பரிசும், கோலப் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், நாமக்கல் எம்எல்ஏ திலீப் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகர நல அலுவலர் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், அந்தினி, சுப்ரமணியன், ஜான்ராஜா, பாஸ்கர், தூய்மைப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்



