நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் சன்னரக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து புகார்கள் இருப்பின் தெரிவிப்பதற்காக கூட்டுறவுத்துறை மூலம் குறைதீர் வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30 என்ற விலையில் சன்னரக அரிசி விற்பனை கடந்த 17ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
மாநில அளவில் இத்திட்டத்திற்காக மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, திருச்செங்கோடு டிசிஎம்எஸ் கூட்டுறவு சங்கம், பள்ளிபாளையம் உழவர் பணி கூட்டுறவு சங்க கிடங்கு, ராசிபுரம் ஆர்சிஎம்எஸ் கூட்டுறவு சங்கம், மோகனூர் சர்க்கரை ஆலை பணியாளர்கள் பண்டகசாலை, ஆகிய இடங்களில் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.30, புழுங்கல் பொன்னி அரிசி ரூ. 60, துவரம் பருப்பு ரூ.130, உளுத்தம் பருப்பு ரூ.140, பூண்டு ரூ. 240, மல்லி (தனியா) ரூ.240, மிளகாய் ரூ. 330 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்கள், தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் பிரத்யேக வாட்ஸ் அப் எண்: 9884000845 என்ற கூட்டுறவு துறையின் அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண்ணாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




