கொச்சியில் நிகழ்ந்த கோர விபத்தில், கூடுதல் அமர்வு நீதிபதியின் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் மோதியதில் 55 வயதுடைய ஸ்கூட்டர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொச்சியில் உள்ள சேராநல்லூர் பகுதியில் அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ஜெயபாலகிருஷ்ணன் (55) என்ற நபர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அதிவேக சொகுசு காரான மெர்சிடிஸ் பென்ஸ் அவர் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணன் கடந்த 30 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் இணைந்து சாலையோர உணவகம் நடத்தி வந்துள்ளார். தினமும் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு அவர் தனியாக வீடு திரும்பிய போதே இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது எர்ணாகுளம் கூடுதல் அமர்வு நீதிபதியின் 17 வயதுடைய மைனர் மகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சொகுசு கார் சம்பந்தப்பட்ட நீதிபதியின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனைப் போலீசார் காவலில் எடுத்தனர். ஆரம்பகட்ட பரிசோதனையில் விபத்தின் போது சிறுவன் மதுபோதையில் இருக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும், கூடுதல் பரிசோதனைக்காக அவனது இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, காவல் நிலையத்திற்குச் சென்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சம்பந்தப்பட்ட நீதிபதி மற்றும் காவல்துறை நடந்து கொண்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் கூறுகையில், லைசென்ஸ் இல்லாத சிறுவனிடம் காரைக் கொடுத்தது யார்? டிரைவிங் லைசென்ஸ் இல்லாத ஒரு மைனர் எப்படி வாகனம் ஓட்டலாம்?” என்று கேள்வி எழுப்பியபோது, நீதிபதியும் அதிகாரிகளும் ஆணவத்துடன் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், மைனரிடம் வாகனத்தைக் ஒப்படைத்த பெற்றோர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மைனர் என்பதால் சிறுவர் நீதி வாரியத்தின்வழிகாட்டுதலின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




