தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், வடகரை கீழ்ப்பீடாகை கிராமம், சாம்பவர் தெரு 10-வது வார்டில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்காசி மேற்கு ஒன்றியச் செயலாளர் ஸ்ரீபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த 2007-ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அரசு தரப்பில் 108 பட்டாக்கள் வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் 15 நபர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பட்டாக்களின் நிலை குறித்து விசாரணை நடத்தி, தகுதியான குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், வடகரை கீழப்பீடா கை பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு வடகரை பகுதியில் அரசுக்கு சொந்தமான தகுதியான நிலம் இருப்பின், அதனை ஆய்வு செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் உள்ள நடை முறைப்படி தனிப்பட்டா வீட்டு மனை வழங்க வேண்டுமெனவும் ஒன்றியச்செயலாளர் ஸ்ரீபால் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடையநல்லூர் தென்காசி, ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் கலந்துகொண்டனர்.




