Close
அக்டோபர் 28, 2026 3:02 மணி

பதிவுத் துறையை, தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி, ஆவண எழுத்தாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அல்லது அவுட் சோர்சிங் மூலம் நடைமுறைப்படுத்தும் அரசு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அரசு உரிமம் பெற்ற ஆவண எழுத்தாளர்கள் மற்றும் நகல் தயாரிப்பாளர்கள் சார்பாக கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

மதுரையில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தங்கள் வழக்கமான பணிகளைப் பாதிப்பின்றி மேற்கொண்ட பல்லாயிரக்கணக்கான ஆவண எழுத்தாளர்கள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், ​பத்திரப்பதிவு மற்றும் தரவு மேலாண்மை சேவைகள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றால், சாதாரண பொதுமக்கள் செலுத்தும் சேவைக் கட்டணங்கள் பெருமளவில் உயரும் ஆபத்து உள்ளது.

மக்களின் நிலம், சொத்து உரிமைகள் மற்றும் வில்லங்கச் சான்றுகள் தொடர்பான முக்கியமான தரவுகள் தனியார் வசம் செல்வது, எதிர்காலத்தில் ஆவண முறைகேடுகளுக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

பல்லாண்டுகளாக அரசின் உரிமம் பெற்று இத்துறையை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான ஆவண எழுத்தாளர்கள், நகல் தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்படும்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமம் பெற்ற ஆவண எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்தகட்டமாகத் தமிழ்நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் முற்றுகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்  என கூறினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top