சிறு, குறு விவசாயிகள் 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தால் இயங்கும் தீவனப்புல் நறுக்கும் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தமிழகத்தில் 2026-27 ஆம் நிதியாண்டில், 50 சதவீதம் மானியத்தில் 1,500 புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளது. கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, அதன் மூலம் பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு திறனை உருவாக்கவும், இனப்பெருக்கத்தினை மேம்படுத்துவதற்கும் பசுந்தீவனம் ஆதாரமாக உள்ளது.
கால்நடை வளர்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன், தீவன விரயத்தை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தீவன மேலாண்மை மூலம் கால்நடைகளின் தீவன உற்பத்தி செலவு குறைந்து கால்நடை வளர்ப்போரின் வாழ்க்கைத் தரம் மேம்டும். நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் சிறுகுறு விவசாயிகளுக்கு, பாசன வசதியுள்ள விவசாய நிலத்தில் தீவனப்புல் பயிரிடுதல் மற்றும் குறைந்தது 2 கால்நடைகள் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தால் இயங்கும் 60 எண்ணிக்கை தீவனப்புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் பழங்குடியினர், ஆதிதிராவிடர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களை பெறவும், விண்ணப்பிக்கவும் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




