Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

பெருந்துறை இடைத்தேர்தலில் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பவார்: ஒருங்கிணைப்பாளர்

பெருந்துறை இடைத்தேர்தலில் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வர உள்ளது. இதற்காக அந்த தொகுதிகளுக்கு முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரோடு ஷோ செல்கிறார்.

முதல்வர் வருகையையொட்டி புதுக்கோட்டையில் 50 கி.மீ., தூரம் மற்றும் பெருந்துறைக்கு கோவையில் இருந்து 80 கி.மீ., தூரத்திற்கு சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகிறது. இதற்கு அரசுப் பணம் ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அதேவேளையில் இந்த பயணத்தின்போது காவிரி பிரச்சினையை பற்றி முதல்வர் வாய் திறக்கவில்லை. முதல்வர் மட்டுமல்ல எதிர்கட்சியினரும் வாய் திறக்கவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிவித்தார். அதையே இப்போதைய தமிழக முதல்வரும் அறிவிக்கிறார். அதற்கு பதில் காவிரி-மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தலாம். பாண்டியாறு-மேயாறு திட்டம் செயல்படுத்தினால் தமிழகம் பயன்பெறும்.

பெருந்துறை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் அரசு, அம்மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி மறுக்கிறது. எனவே கள் இறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு மருந்து விலையை 70 முதல் 98 சதவீதம் வரை குறைத்தது வரவேற்கத்தக்கது. ஆனால் நோய் வருவதற்கான காரணிகளை ஆராய்ந்து அவற்றை தடை செய்ய வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top