குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள், வலுவான அந்நிய முதலீடுகள் மற்றும் மாறிவரும் உலகளாவிய நிதி சூழலுக்கு மத்தியில் இந்தியா மிகச் சாதகமான பொருளாதார நிலையில் உள்ளது என்று கோடக் நியோ நிறுவனத்தின் வணிகப் பொருட்கள் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை குறித்து பேசிய அவர், தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 91-92 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. போர்ச் சூழல் கட்டுக்குள் இருந்தால் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 80 முதல் 110 டாலர் என்ற வரம்பிற்குள் இருக்கும். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் குறைந்தால் மட்டுமே விலை 70–75 டாலர்என்ற நிலைக்கு வரும். நிலைமை மேலும் மோசமடைந்தால் விலை 115–120 டாலர் வரை செல்லக்கூடும் என்று குறிப்பிட்டார்.
அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து பானர்ஜி கூறுகையில், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 93.5 என்ற அளவில் வர்த்தகமாகிறது. வரும் மாதங்களில் மேற்கு ஆசியாவில் அமைதி திரும்புமானால், ரூபாய் மதிப்பு வலுவடைந்து டாலருக்கு எதிராக 91 அல்லது 90 நிலைக்கு உயர வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கி பணவீக்கம், ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் ரூபாயின் பணப்புழக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சீரான இடைவெளியில் டாலர்களை வாங்கி சந்தையை சமநிலைப்படுத்தி வருகிறது.
உலகளாவிய எரிபொருள் விலை மாற்றங்களால் பணவீக்க ஆபத்துகள் இன்னும் முழுமையாக மறையவில்லை. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டும் மேலும் ஒரு முறை வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. இருப்பினும், ரூபாயின் மதிப்பு உயர்வதும் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைவதும் பணவீக்க அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்றார்.
முதலீட்டாளர்கள் தங்களது கவனத்தை செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பங்குகளிலிருந்து விலக்கி, பிற துறைகளிலும் பல்வகைப்படுத்தி முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். நடப்பு மாதத்தில் மட்டும் இந்தியாவிற்குள் சுமார் 4.5 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு வந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களின் இந்த மாற்றம் இந்திய நிதிச் சந்தைகளுக்கு பெரிதும் பலன் அளிக்கிறது. அமெரிக்க தேர்தல்களுக்குப் பிறகு டிரம்ப் நிர்வாகத்திற்கும் காங்கிரஸிற்கும் இடையே ஏற்படக்கூடிய கொள்கை ரீதியான முரண்பாடுகள் டாலர் மதிப்பை பலவீனப்படுத்தி, இந்திய ரூபாய்க்கு மேலும் பல சேர்க்கும். நிச்சயமாக இந்திய பொருளாதாரம் தற்போது மிகச் சாதகமான நிலையில் உள்ளது என கூறினார்.




