Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறன் வளர்க்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் ஆங்கிலம் பேசும் திறனை வளர்க்கும் வகையில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மொத்தம் 30 பேருக்கு மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி, நாமக்கல், மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

கருத்தாளர் சுமதி வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் மாதவன், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் மதுபாலன், பயிற்சிக் கையேட்டை வெளியிட்டு, பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது: அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு உகந்தவாறு ஸ்பீக்கத்தான்-30 என்ற பயிற்சி தொகுப்பை, மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆங்கிலம் பேசும் பயிற்சி என ஒரு மாதத்திற்கு 30 பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டு வழியில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போது ஆங்கிலம் பேசும் திறன், தன்னம்பிக்கை, குழு மனப்பாங்கு, சரளமானப் பேச்சு மற்றும் படைப்பாற்றல் உருவாகும். உலக அறிவைப் பெறுவதற்கு ஆங்கிலம் ஒரு கருவி என்பதால் இப்பயிற்சி முக்கியமாகும் என்று கூறினார்.

மேலும் தேசிய வருமான வழி திறன் ஊக்கத்தொகை தேர்விற்கு 8ஆம் வகுப்பு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில், மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஸ்டுடியோவில் இண்டர்நெட் மூலம் அளிக்கப்படும் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

முடிவில் பயிற்சி நிறுவன துணை முதல்வர் சந்தோஷம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top