Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

பறவை காய்ச்சல் நோய் தாக்காமல் இருக்க நாமக்கல் பகுதி கோழிப்பண்ணைகளில் பயோ செக்யூரிட்டி பாதுகாப்பு அமல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில், பயோ செக்யூரிட்டி பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதால், 100 சதவீதம் பறவை காய்ச்சல் தாக்க வாய்ப்பில்லை என, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன் கூறினார்.

தமிழகத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பிராய்லர் கோழிப் பண்ணைகளில், சில வாரங்களுக்கு முன், ஆயிரக்கணக்கான கறிக்கோழிகள் இறந்த நிலையில், அவை பறவை காய்ச்சல் தாக்கத்தால்தான் இறந்தன என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட பண்ணைகளில், 10 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. அவற்றின் மூலம், தினமும், 8 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், தமிழகம், கேரளம், வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தில், பயோ செக்யூரிட்டி பாதுகாப்பு முறையில் கோழிகள் பண்ணைகளில் கூண்டுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு பறவை காய்ச்சல் நோய் தாக்க, 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலை, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்படி, முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

இங்குள்ள கோழிப் பண்ணைகளின் நுழைவு வாயிலில், பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்ட பாதை வழியே மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை, கோழிப்பண்ணை வரலாற்றில், நாமக்கல் மண்டலத்தில் பறவை காய்ச்சல் நோய் தாக்கியது இல்லை. இனியும் தாக்க வாய்ப்பில்லை.

மேலும் கடலூரில் இறந்த கோழிகள் கறிக்கோழிகள் அவை தரையில் வளர்க்கப்பட்டவை. எனவே பொதுமக்கள் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top