Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

விவசாயிகளின் வருமானத்தை 10 மடங்காக உயர்த்தும் ‘அக்ரிவோல்டாயிக்ஸ்’ புரட்சி!

இந்தியாவில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் உணவு தானியங்களை விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரே நிலத்தில் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரமும் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் தற்போது 10 மடங்காக உயர்ந்துள்ளது. வழக்கமான சோலார் பூங்காக்களில், சோலார் பேனல்கள் தரையிலிருந்து மிகக் குறைந்த உயரத்தில் அமைக்கப்படும். இதனால் அந்த நிலத்தில் வேறு எந்தப் பயிரையும் வளர்க்க முடியாது; அந்த நிலம் விவசாயத்திற்குப் பயன்படாமல் போய்விடும்.

ஆனால், அக்ரிவோல்டாயிக்ஸ் முறையில் சோலார் பேனல்கள் உயரமான தூண்களில் பொருத்தப்படுகின்றன. இதனால் சோலார் பேனல்களுக்கு அடியில் கிடைக்கும் நிழல் மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி விவசாயிகள் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பல வகையான பயிர்களை வெற்றிகரமாக விளைவிக்க முடிகிறது. ஒருபுறம் உணவு வழங்குபவராக  இருக்கும் விவசாயிகள், மறுபுறம் சக்தி வழங்குபவராக மாறி மின்சாரத்தையும் உற்பத்தி செய்து கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கஜோத் மல் ஜாட் என்ற விவசாயி, தனது நிலத்தில் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரித்து வந்தாலும், விவசாயத்தை இழந்துவிட்டோமே என்ற வருத்தத்தில் இருந்தார்.

பின்னர், இந்திய சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சி கவுன்சில் குழுவின் உதவியுடன், தனது சோலார் பேனல்களை உயரமாக மாற்றி அதற்கு அடியில் பயிர்களை வளர்க்கத் தொடங்கினார். பொருளாதார நிபுணர் சுதீப் பாசு மற்றும் அவரது குழுவினரின் வழிகாட்டுதலோடு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த முயற்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் சோலார் பேனல்களுக்கு அடியில் மக்காச்சோளம், கோதுமை, ஸ்ட்ராபெர்ரி, ப்ரோக்கோலி, மிளகாய், தக்காளி மற்றும் டிராகன் ஃபிரூட் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்த முறையின் மூலம், விவசாயிகளின் ஆண்டு வருமானம் ரூ. 40,000-த்திலிருந்து ரூ. 4 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, சுத்தமான பசுமை ஆற்றல் உற்பத்தியும் அதிகரிக்கிறது. விலையுயர்ந்த எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருப்பது குறைகிறது.

இந்த முறை விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தாலும், தனிப்பட்ட விவசாயிகளால் சொந்தமாக இத்தகைய பெரிய திட்டங்களை அமைப்பது ஆரம்பத்தில் சற்று கடினமான சவாலாகவே உள்ளது. தற்போது பெரும்பாலான திட்டங்கள் நிறுவனங்கள் அல்லது டெவலப்பர்களின் மூலமே முன்னெடுக்கப்படுகின்றன.

ஜெர்மனி, ஜப்பான், சீனா, பிரான்ஸ் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தி வந்தாலும், இந்தியாவில் இது இப்பதான் வளர்ச்சிப் பாதையில் அடி எடுத்து வைத்துள்ளது.

ஒரே நிலத்தில் விவசாயமும் மின் உற்பத்தி செய்து இரட்டை லாபம் ஈட்டும் இந்த அக்ரிவோல்டாயிக்ஸ் புரட்சி, இந்திய விவசாயத்துறையின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top