தமிழக அமைச்சரும், அரசியல் பிரமுகருமான ஆதவ் அர்ஜுனாவுக்கும், பிரபல லாட்டரி வணிகர் சாண்டியாகோ மார்ட்டினின் மகளான டெய்சி மார்ட்டினுக்கும் இடையேயான 14 வருட கால திருமண வாழ்க்கை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பரஸ்பரமாகப் பிரிவதாகத் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக அறிவித்துள்ளனர்.
இந்தப் பிரிவு குறித்து டெய்சி மார்ட்டின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
“கடந்த 14 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை அன்போடும் புரிதலோடும் கடந்து வந்துள்ளோம். நண்பர்களாகவும், வாழ்க்கை இணைவர்களாகவும், பெற்றோர்களாகவும் நாங்கள் இணைந்து பயணித்தோம். தற்போது, நானும் ஆதவ் அர்ஜுனாவும் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிந்து, தனித்தனி பாதைகளில் பயணிக்க முடிவு செய்துள்ளோம்.”
மேலும், தாங்கள் இருவரும் பிரிந்தாலும், தங்களது குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக இணைந்து குழந்தையை வளர்க்கும் பொறுப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா மீது தனக்கு எப்போதுமே மரியாதை உண்டு என்றும், அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் டெய்சி மார்ட்டின் கூறியுள்ளார். மேலும், தங்களின் இந்த மாற்றமான சூழலில் பொதுமக்களும் ஊடகங்களும் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உரிய மதிப்பளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெய்சி மார்டின் பிரபல தொழிலதிபர் சான்டியாகோ மார்டின் மற்றும் லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் தம்பதியின் மகள். கோயம்புத்தூரில் பிறந்த இவர், டெல்லி மற்றும் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்) வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்
2016-ஆம் ஆண்டு முதல் அரைஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இதுபோக ஆகாசா ஃபைனான்ஸ் லிமிடெட், ஃபியூச்சர் கேமிங் ஹோட்டல் & சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார்.
ஆதவ் அர்ஜுனா மற்றும் டெய்சி மார்ட்டின் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாகப் பழகி, பின்னர் காதலித்து 2012-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.




