Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 515 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் 5 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

மேலும், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மராத்தான் ஓட்டப்போட்டியில் வெற்றிபெற்ற 100 பேருக்கு மொத்தம் ரூ. 1,38,500 பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

திருச்செங்கோடு தாலுகா, தேவனாங்குறிச்சியில் வசித்து வரும் சின்னப்பிள்ளை என்பவரது வீடு, தீ விபத்தில் சேதமடைந்ததையொட்டி அவருக்கு ரெட்கிராஸ் சார்பில் சமையல் பாத்திரங்கள் அடங்கிய தொகுப்பு, வேட்டி, சேலை, துண்டு, பாய், கொசுவலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ சரவணன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top