Close
நவம்பர் 26, 2026 5:47 மணி

உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசன செய்ய தனி தரிசன வழி ஏற்படுத்தி தர வேண்டும் தீபத் திருவிழா நாட்களில் சிறப்பு அனுமதி அட்டைகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் உள்ளூர் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் மாதம் 24-ந்தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதைக் காண 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

கடந்த நவம்பர் 15, 2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத் திருவிழாவின் போது, உள்ளூர்வாசிகளின் தரிசன உரிமை குறித்து சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையேயும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை உள்ளூர் ஆன்மீக பக்தர்கள், பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்-கிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில்,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வருவதால் ஏற்படும் கூட்ட நெரிசலில் திருவண்ணாமலை உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே உள்ளூர் முகவரி கொண்ட இருப்பிட சான்றின் அடிப்படையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் தனி தரிசன வழியும் முன்னுரிமையும் வழங்க வேண்டும்,

உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய தனி வரிசை அல்லது குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும், தீபத் திருவிழா நாட்களில் முதியவர்கள், பெண்கள் ,குழந்தைகள் சுவாமி தரிசனம் செய்ய தனி நுழைவு வாயில் மற்றும் சிறப்பு அனுமதி அட்டைகள் வழங்க வேண்டும்.

தரிசனத்திற்கு வரும் உள்ளூர் பக்தர்களைக் கோயில் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் கனிவுடன் நடத்த வேண்டும்,

அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சுவாமி தரிசனம் செய்து (அதாவது வடக்கு கோபுரம்), பின்னர் திருமஞ்சன கோபுரம் (அதாவது தெற்கு கோபுரம்) வழியாக பக்தர்களை அனுப்புகின்றனர்.

வடக்கு கோபுரத்தில் தங்கள் காலணிகளை விட்டுவிட்டு வரும் பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக வந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் சுற்றி கொண்டு வந்து காலணிகளை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது, இதனால் வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் என பலரும் வெயிலில் மிகவும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனது வடக்கு கோபுரம் அல்லது தெற்கு கோபுரம் இரண்டின் வழியாகவும் வெளியே செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

குறுக்கு வழியில் கட்டணம் பெற்றுக்கொண்டு தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும் இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்தி, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,

மேலும் திருவண்ணாமலை நகர் முழுவதும் தெருக்களில் காவல்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் வீடுகளுக்கு செல்லவும் மருத்துவமனை அளிக்க அத்யாவசிய தேவைகளுக்கு வாகனங்களில் பயணிக்கவும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது இதனை தவிர்க்க உள்ளூர் மக்களுக்கு சிறப்பு வாகன அனுமதி அட்டைகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகப் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர், பாதுகாப்பு என்ற பெயரில், முதல் நாள் திருவிழாவிலேயே அதிகளவு காவல்துறையினரை நிறுத்தி அதிகளவு கட்டுப்பாடுகள் செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரிலேயே திருவிழாவை கொண்டாட முடியாமல் தவிப்பதை உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் கலந்து பேசி தீர்வு காணவேண்டுமென முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top