Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நாமக்கல் எஸ்.பி. அறிவுரை

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தலைமை வகித்து பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், ஷோரூம்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், வணிகர்களிடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தரமான சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை கடைகளுக்கு உள்ளும், வெளியிலும் பொருத்திட வேண்டும்.

மேலும் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதின் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்கலாம். மேலும் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்.

கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வணிகர்கள் தங்களது கடைகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சட்டவிரோத செயல்களைக் கண்டறிந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரன் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top