நாமக்கல் ரிங் ரோட்டில் மரூர்ப்பட்டி அருகில் ரூ. 70 கோடி மதிப்பில் அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலத்தில், ராட்சத கிரேன்கள் மூலம் இரும்பு பீம்கள் பொருத்தும் பணி துவங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், முதலைப்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 23 கி.மீ., தூரத்திற்கு ரூ. 400 கோடி மதிப்பில் அவுட்டர் ரிங் ரோடு அமைக்கும் பணி சுமார் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இந்த ரோட்டின் குறுக்கே, மரூர்ப்பட்டி அருகே சேலம்-கரூர் அகல ரயில்பாதை செல்கிறது.
இங்கு வாகனப் போக்குவரத்து வசதிக்காக ஏற்கனவே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். குறுகிய பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அங்கு ரயில்வே மேலம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனால் அங்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் சுமார் 800 மீட்டர் தூரம் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் மேம்பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. தற்போது மேம்பாலம் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரயில்வே துறையின் உதவியுடன், ரயில்வே தண்டவாளத்திற்கு மேல்புறம், மேம்பாலத்தின் மீது இரும்பு பீம்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இரும்பு பீம்கள் வைக்கும் பணி மேற்கொள்ள வசதியாக, அப்பகுதியில் 16ம் தேதி முதல் வரும் 22-ம் தேதி வரை 7 நாட்கள் வாகனப் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, மரூர்ப்பட்டி வழியாக செல்லிபாளையம் செல்லும் ரோடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவுட்டர் ரிங் ரோட்டில் செல்லும் சிறிய வாகனங்கள், செம்பாறைபுதூர் ரோட்டின் வழியாக செல்லிபாளையம் செல்ல வேண்டும்.
லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் புதன்சந்தை – சேந்தமங்கலம் – வேட்டாம்பாடி வழியாக மாற்றுப்பாதையில் செல்லும்படி நெடுஞ்சாலைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




