கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை முன்னின்று நடத்திய தொல்லியல் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு, மலேசியாவின் கோலாலம்பூரில் டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தமிழ் வரலாற்று ஆய்வு மாநாட்டில் பங்கேற்க இந்தியத் தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது.
மாநாட்டில் பேசும் கருத்துகளின் எழுத்துப்பூர்வ மற்றும் காணொளிப் பதிவுகளை சமர்ப்பிக்க வேண்டும், மத்திய அரசு மற்றும் தொல்லியல் துறையின் கொள்கைகளுக்கு முரணாகவோ, அவற்றை விமர்சிக்கும் வகையிலோ கருத்து தெரிவிக்கக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான உறுதிமொழியை அளிக்க அமர்நாத் ராமகிருஷ்ணா மறுத்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டிலும் பங்கேற்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, கீழடியின் முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் தொடர்பாக அவர் தயாரித்த 982 பக்க அறிக்கையில், கீழடி நாகரிகத்தின் தொடக்கக் காலம் கி.மு. 8-ம் நூற்றாண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் கால நிர்ணயம் மற்றும் தொல்பொருட்களின் வகைப்பாடு தொடர்பாக இந்தியத் தொல்லியல் துறை ஆட்சேபனை தெரிவித்த நிலையில், அறிக்கையைத் திருத்த அமர்நாத் ராமகிருஷ்ணா மறுத்து வருகிறார்.
தமிழகத் தொல்லியல் துறையின் ஆய்வில் கீழடி நாகரிகம் சுமார் 2,600 ஆண்டுகள் பழமையானது என்பதற்கான அறிவியல் சான்றுகள் வெளியாகியுள்ளன.
கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பான கருத்து வேறுபாடுகள் நீடிக்கும் நிலையில், சர்வதேச மாநாட்டில் பங்கேற்க இரண்டாவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டிருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

