Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

அருங்காட்சியகமாக மாறும் சோனியா காந்தியின் பூர்வீக இல்லம்

சோனியா காந்தியின் பூர்விக வீடு

இத்தாலியில் உள்ள சோனியா காந்தியின் பூர்வீக இல்லம் அவரது வாழ்க்கையைப் போற்றும் வகையில் அருங்காட்சியகமாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த இடத்தைப் பார்வையிடக் காந்தி குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீட்டின் உரிமையாளர் சுக்தேவ் சிங் காங் கூறியதாவது: இந்த இல்லத்தைப் பார்ப்பதற்கும் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் இந்தியா மற்றும் குறிப்பாகக் கேரளப் பகுதியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் தொடர்ந்து வந்து கொண்டிருகின்றனர். முன்னதாக இந்த வீடு பூட்டப்பட்டே வைக்கப்பட்டிருந்தது. தற்போது பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாகப் பராமரிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறினார்.

இத்தாலியின் விசென்சா மாகாணத்தில் உள்ள லூசியானா பகுதியில் அமைந்துள்ள ஆறு அறைகள் கொண்ட இந்தக் கல் மற்றும் கான்கிரீட் வீட்டை, இத்தாலியில் வசிக்கும் சீக்கியத் தொழிலதிபரான சுக்தேவ் சிங் காங் 2020-ம் ஆண்டில் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் வாங்கினார். இந்த இல்லத்திற்கு வெளியே ‘இந்தியன் ஹவுஸ்’ என்ற பெயர்ப்பலகையும், சோனியா காந்தியின் பிறப்பிடம் என்பதற்கான அடையாளமும் வைக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தியின் நினைவுகளைப் போற்றும் வகையில் இந்த இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதுடன், காந்தி குடும்பத்தினர் வழங்கும் புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் நினைவுப் பொருள்களையும் காட்சிக்கு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் காங் தெரிவித்துள்ளார். வீட்டை வாடகைக்கு விடுவதற்கோ அல்லது வணிக நோக்கங்களுக்கோ பயன்படுத்தாமல், அவரது வாழ்க்கை வரலாற்றைப் பாதுகாக்கும் வகையில் பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கிராம மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் சோனியா காந்தியும் அவரது குடும்பத்தினரும் இந்த இல்லத்திற்கு நேரில் வந்து பார்வையிட வேண்டும் எனத் தமது குடும்பத்தின் சார்பில் அழைப்பு விடுப்பதாகவும் சுக்தேவ் சிங் காங் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top