Close
நவம்பர் 26, 2026 5:25 மணி

வீட்டிலேயே குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பொதுமக்களுக்கு நாமக்கல் மாநகராட்சி பாராட்டு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டிலேயே குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பொதுமக்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாநகராட்சியை தூய்மையான நகரமாக உருவாக்குவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுகளைக் குறைத்தல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்களிடையே வீட்டிலேயே மக்கும் கழிவுகளை உரமாக மாற்றும் ஹோம் கம்போஸ்ட் முறையை மாநகராட்சி தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

ஹோம் கம்போஸ்ட் என்பது வீடுகளில் தினசரி உருவாகும் காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகள், உணவுக் கழிவுகள், இலைகள், பூக்கள் போன்ற மக்கும் கழிவுகளைத் தனியாக சேகரித்து, முறையாக மக்கச் செய்து இயற்கை உரமாக மாற்றும் எளிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறையாகும். இம்முறையில் வீட்டிலேயே ஒரு உரக்கொள்கலன் அமைப்பில் மக்கும் கழிவுகளை அடுக்குகளாகச் சேர்த்து, வீடுகளில் உருவாகும் மக்கும் கழிவுகள் குப்பையாக வெளியேற்றப்படாமல், பயனுள்ள இயற்கை உரமாக மாற்றப்படுகின்றன.

வீடுகளில் தயாரிக்கப்படும் இத்தகைய இயற்கை உரங்களை வீட்டுத் தோட்டங்கள், மாடித்தோட்டங்கள், பூச்செடிகள், காய்கறிச் செடிகள், பழச்செடிகள் மற்றும் மரங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான இயற்கை ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.

நாமக்கல் மாநகராட்சியில் மொத்தம் 78,416 குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் இருந்து தினசரி உருவாகும் சுமார் 35 டன் அளவிலான மக்கும் கழிவுகள் மாநகராட்சியால் சேகரிக்கப்பட்டு உரமாக்கும் செயல்முறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் ஹோம் கம்போஸ்ட் முறையை பின்பற்றும் பொதுமக்களுக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

கமிஷனர் செல்வபாலாஜி தலைமை வகித்து, ஹோம் கம்போஸ்ட் முறையை சிறப்பாக மேற்கொண்டு வரும் 5 பொதுமக்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். காதிபோர்டு காலனியைச் சேர்ந்த பாலசந்திரன், லத்துவாடி மீனா, கருங்கல் பாளையம் உதயபரணி, முதலைப்பட்டி விஜயகுமாரி, உமா ஆகியோர் தங்களது வீடுகளில் மக்கும் கழிவுகளை முறையாக உரமாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருவதற்காக பரிசுகள் பாராட்டப்பட்டனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், சுப்பிரமணியன், ஜான்ராஜா, நந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top