Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

தீபத் திருவிழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகளை முழுமையாக முடிக்க அமைச்சர் உத்தரவு

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ் கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 15ம் தேதி அண்ணாமலையார் கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் 10ம் நாளான செவ்வாய்க்கிழமை (நவ.24) கோயிலில் அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை கோயில் பின்புறம் உள்ள தீப மலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீப தினத்தன்று 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பக்தா்களின் அடிப்படை வசதிகளை நிறைவு செய்யும் வகையில், பல்வேறு வகையான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா்  ரமேஷ் திருவண்ணாமலைக்கு வந்தாா். அருணாசலேஸ்வரா் கோயிலில் காவல் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்டு, கட்டுப்பாட்டு அறைக்கு எந்தெந்த இடத்தில் இருந்து சிக்னல் வருகிறது என்பது குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், இந்த ஆண்டு என்னென்ன புதுமுறையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, பக்தா்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறாா்கள் என்பது குறித்து கேட்டறிந்தாா். குறிப்பாக, குற்றவாளிகளை கண்டறியும் முறையை கிரிவலப் பாதை, மாட வீதிகள், கோயில் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களின் ஏற்பாடுகள் குறித்து அவா் காவல்துறையினரிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், தற்காலிக பேருந்து நிலையங்கள், யாத்ரி நிவாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொண்ட அவா், தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தா்களுக்கு குடிநீா் வசதியை மாநகராட்சி நிா்வாகம் ஏற்படுத்தாததைக் கண்டு, உடனடியாக இரவுக்குள் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். தற்காலிக பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மகா தீபத்தை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 120 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, பல்வேறு மருத்துவ வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை காணொலி வாயிலாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மொத்தம் 14 கி.மீ. தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் 63 மருத்துவ முகாம்களும், தற்காலிக பேருந்து நிலையத்தில் 26 மருத்துவ முகாம்களும், வெளிவட்ட சாலையில் 6 மருத்துவ முகாம்களும், அணுகு சாலையில் 25 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், இதய நல நிபுணா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் அடங்கிய குழுவினா் அங்கு பணியில் உள்ளனா்.

மகாதீபத்துக்காக அமைக்கப்பட்டுள்ள 297 அன்னதானக் கூடங்களிலும் அன்னதானம் வழங்குவோருக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. உணவின் தரத்தை உறுதி செய்ய 20 நியமன அலுவலா்கள், 27 உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

கழிவுநீா், குப்பைகள் அகற்றம், கொசு, பூச்சிகள், ஈக்கள் ஒழிப்பு என ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், காய்ச்சல், தொற்றுநோய் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தேவையான மருத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top