திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்த பெற்றது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நவ.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மகா தேரோட்டம் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் வைபவம் நாளை (24-ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி சன்னதியில் நாளை அதிகாலை 4 மணிக்கு ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோயிலுக்குப் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஜோதி வடிவமான மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாலை நகரம் முழுவதும் களைகட்டியுள்ளது.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தூரம் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பௌர்ணமி அன்றும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
வழக்கமாக கார்த்தை மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் மகா தீபத்தன்று அல்லது தீபத்திற்கு மறுநாள் தொடங்கும். இந்த ஆண்டு கார்த்திகை மாத பௌர்ணமி மகா தீபத்திற்கு முந்தைய நாள் தொடங்குகிறது.
அதன்படி கார்த்திகை மாத பௌர்ணமி இன்று (திங்கட்கிழமை) இரவு 11.42 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 8.23 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பௌர்ணமி கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகா தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலம் என இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மகா தீபத்தை தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி அண்ணாமலையார் கோயில் மற்றும் மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




