Close
நவம்பர் 26, 2026 7:59 மணி

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: நாமக்கல் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பண்ணைகளுக்குள் நுழையும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தில் 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில கறிக்கோழிப் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நோய் பரவாமல் தடுப்பதற்காக அங்கு நோய் தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள கோழிகள் முழுமையாக அழிக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று அம்மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் 25 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டன. இதனிடையே கடலூர் மாவட்ட கோழிப்பண்ணைகளில் தொடர்ந்து நோய் தாக்கம் இருப்பதையடுத்து நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாமக்கல் கோழிப்பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகளை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாகனங்கள் பண்ணையில் நுழையும் பொழுது கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

மேலும் பண்ணையாட்கள் கிருமி நாசினி நிரம்பிய தொட்டியில் கால்களை நனைத்த பிறகே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பண்ணை வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை கோழிப்பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் செல்வக்குமார் கூறுகையில், கோழிப்பண்ணைகளில் இறப்பு ஏற்பட்டால் பண்ணை உரிமையாளர்கள் தெரியப்படுத்துவர். அதுபோல் நாமக்கல் பண்ணைகளில் கோழிகள் இறப்பு எதுவும் இல்லை. கோழிப்பண்ணைகளில் வழக்கம்போல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top