Close
செப்டம்பர் 29, 2026 6:03 மணி

எல்நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கொமதேக கோரிக்கை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

எல் நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ தாக்கத்தால் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி மற்றும் தீவிர கனமழை, வெள்ளம் என இரண்டு விதமான வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எல் நினோ தாக்கத்தினால் அக்டோபர் இறுதி முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் வரலாற்று ரீதியாக அதிக மழை அல்லது தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் கோடை காலத்தில், தமிழகத்தின் பல இடங்களில் கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சூப்பர் எல் நினோ நிகழ்வு காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் தீவிர மழை அபாயம் உள்ளது.

பெரும்பாலான இடங்களில் எல் நினோ தாக்கத்தால் பருவமழை மழை பொய்த்துவிட்டது. கடும் வறட்சியால்தமிழகத்தில் பல இடங்களில் தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டாதல் நிலத்தடி நீர் மட்டும் வெகுவாக குறைந்து கிணறுகள் மற்றும் போர்வெல்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. விவசாயிகள் பயிர் சாகுபடி பயிரிட முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி, நிபுணர் குழுவை அழைத்து வந்து நிலைமையை ஆய்வு செய்து, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

தமிழகத்தின் எல்.நினோ பாதிப்புகள் குறித்து தமிழக அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்தும் அதனை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது கவலை அளிக்கிறது. எந்த சவாலையும் வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. அதனை தமிழக அரசு பின்பற்றி பொதுமக்களையும், விவசாயிகளையும் வருமுன் காப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top