Close
அக்டோபர் 8, 2026 3:54 மணி

தடையில்லா சான்று வழங்க லஞ்சம் கேட்ட தீயணைப்பு அலுவலர் கைது

தமிழகத்தில் மருத்துவமனைகள் மற்றும் செவிலியர் இல்லங்கள் பாதுகாப்பாக இயங்க தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீயணைப்பு பாதுகாப்பு தடையில்லா சான்று பெறுவது கட்டாயமாகும்.

அந்த வகையில் திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை தொடங்க கட்டடத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் தீயணைப்பு பாதுகாப்பு தடையில்லா சான்றிதழ் கோரி திருவண்ணாமலையை சேர்ந்த கணேஷ் என்பவர் விண்ணப்பித்து உள்ளார்.

இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன் என்பவர் ரூ.10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத கணேஷ் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையில் புகார்செய்தார்.

அதன்பேரில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் அருள்பிரசாத் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் லஞ்சமாக வழங்க கணேஷிடம் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திற்கு சென்ற கணேஷ், போலீசார் கொடுத்த பணத்தை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணனிடம் வழங்கினார். அப்போது அங்கு பதுக்கி இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சரவணன் லஞ்சப் பணம் பெறும் போது சரவணனை சுற்றி வளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். லஞ்சம் பெற்ற உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

புதியதாக மருத்துவமனை தொடங்க கட்டிடத்திற்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top