Close
அக்டோபர் 13, 2026 9:50 மணி

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டண விதிப்பு: ஸ்டிக்கர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்த வணிகர் சங்கத்தினர்

யுபிஐ பண பரிவர்த்தனை கட்டண விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் எழுதிய ஸ்டிக்கர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகளின் முன் ஒட்டி வணிகர் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு கட்டணம் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. இந்த கட்டண விதிப்பு சிறு, குறு வணிகர்களையும், நுகர்வோரையும் நேரடியாக பாதிக்கும். எனவே இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் தமிழ்நாடு வணிர்கர் சங்கத்தினர் பல்வேறு வகையிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தலைமையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளுக்கு விநியோகித்தனர்.

மேலும், அதுகுறித்த ஸ்டிக்கர்களை கடைகளின் முன் ஒட்டினர். இக்கட்டண விதிப்பை திரும்ப பெறும் வரை இதுபோன்ற அமைதி வழியில் அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என வணிகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் வர்த்தக யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்வதை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பதில் ஜனவரி ஒன்றாம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.2,000க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 % கட்டணம் வசூலிக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top