Close
அக்டோபர் 8, 2026 6:47 மணி

கள்ளுக்கான தடையை நீக்க கோரி மாநிலம் முழுவதும் கள் விற்பனை செய்யும் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வேலுசாமி, மாநில தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.

கள்ளுக்கான தடையை நீக்க கோரி, வரும் நவ. 2ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் முன்பு கள் விற்பனை செய்யும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக விவசாயிகளின் நிலத்தில் உள்ள பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து, கலப்படம் இல்லாமல் இயற்கையான முறையில் இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை, தமிழ்நாடு அரசு நீக்க கோரி 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து, பல கட்ட போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளுக்கான தடையை நீக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கள்ளுக்கு தடையில்லை. தமிழகத்தில் மட்டும் கள்ளை கலப்படம் என்று கூறி ஏற்கனவே தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மது பானங்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்து, போதை கலாச்சாரத்தால் இளைய சமுதாயம் சீர்கெட்டுள்ளது.

சங்க காலத்தில் தமிழர்கள் தினந்தோறும் கள்ளை உணவில் ஒரு பகுதியாக பருகி வந்துள்ளது குறித்து வரலாற்று குறிப்பு தெளிவு படுத்துகிறது. கள்ளுக்கு உண்டான தடையை தமிழ்நாடு அரசு நீக்காததை கண்டித்து, வருகின்ற நவ. 2ம் தேதி காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் அவரவர் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளு கட்டி, இறக்கி கொண்டுவந்து அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கள்ளு விற்பனை செய்யும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top