சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை பாயும் என்கிறது அரசு. ஊடகங்களின் தொடர் குரலாக அது ஒலிக்கிறது.
மதிப்பெண்களை நோக்கிய கல்வியே நம் கல்வி. எப்படி எழுதுகிறான் என்பதை வைத்தே அவன் கல்வி முழுமையும் கணக்கிடப்படுகிறது. ஆக நன்றாக எழுதினால் மட்டுமே நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்பது வெறும் மதிப்பெண் அல்ல. அந்தக் குடும்பத்து கௌரவம். அந்தப் பெற்றோரின் கனவு.
12 ஆம் வகுப்பு மதிப்பெண் என்பது அந்த மாணவரின் வாழ்க்கையை வழிநடத்தும் திசைகாட்டி. நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் அரசு கல்லூரிகளே உள்ளே அனுமதிக்கின்றன.
சுமாரான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் இல்லை. அவர்கள் தனியார் கல்லூரிகளை நோக்கி ஓடுகிறார்கள்.
தமிழை உயிர் மூச்சாகப் பேசும் அரசுகள் தமிழ்மொழி மதிப்பெண்ணை மதிப்பதே இல்லை. தமிழில் 100 க்கு 100 எடுத்தாலும் அது cut off ல் சேராது.
இந்நிலையில் மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே நல்வாழ்க்கை என்கிறது நம் கல்வி முறை. மதிப்பெண்கள் குறைந்தால் சமூகம் மட்டுமல்ல பெத்த தாய் கூட அந்தக் குழந்தையை பத்து பைசாவுக்கு மதிப்பதில்லை.
அப்பாக்களும் குறைந்த மதிப்பெண் எடுத்த தங்கள் பிள்ளைகளிடம் பேசுவதையே நிறுத்திவிடுவார்கள். ரொம்ப ஸ்ரிக்ட் அவங்க.
ஆக மதிப்பெண்களைத் துரத்துகிறது நம் கல்வி.
இம்மாதம் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை விடுமுறை நாட்களே அதிகம். பிறகு தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், ரம்ஜான் என அரசு விடுமுறைகள் தாண்டி, மழை விடுமுறை, திருவிழா விடுமுறை, தேர்தல் விடுமுறை எனத் தனித்தனி விடுமுறைகள்.
ஒரு விடுமுறையில் வகுப்பறை விட்டு வெளியே செல்லும் மாணவன் பள்ளிக்கு மீண்டும் வருகிற போது அந்த மாணவன் பழைய நிலைக்கு, முந்தைய கல்விச் சூழலுக்கு வருவதற்கே இரண்டு நாட்கள் ஆகின்றன.
காரணம் விடுமுறையில் மொபைல் போன், நொறுக்குத் தீனி, இன்ஸ்டா ரீல்ஸ். வெற்று அரட்டை என நேரத்தை வீணடிப்பது மட்டுமல்ல, ஒட்டு மொத்த அறிவீனக்குப்பைகளை மனதிற்குள் கொட்டி நிரப்பிவிடுகிறார்கள். அந்தக் குப்பைகள் வெளியேற மறுக்கின்றன.
இதில் பெண் பிள்ளைகளும், சில ஆண் பிள்ளைகளும் ஓரளவு தங்களை சரியாக வைத்துக் கொள்கிறார்கள்
விடுமுறையில் இருசக்கரவாகனத்தில் மூன்று பேர் ஏறி அதிவேகமாக ஓட்டுகிறார்கள். விழுந்து கை கால் கட்டோடு பள்ளிக்கு வருகிறார்கள். சில மரணங்களும் நிகழ்கின்றன.
பள்ளிக்கூடம் வச்சிருந்தா என் புள்ள உயிரோட இருந்திருப்பானே எனக் கதறிய தாய்களை நான் அறிவேன்.
ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விடுமுறை என்பது சரி. காலாண்டு, அரையாண்டு விடுமுறையில் அவனுக்குப் பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை பாயும் என மிரட்டினால் மெல்லக் கற்கும் மாணவர்களின் எதிர்காலம் என்ன..?
அந்த விடுமுறை நாட்களில் 10,12 மாணவர்களின் விடுமுறை அஜென்டா என்னவாக இருக்கும்…?
சில மாணவர்கள் போதையின் பாதை நோக்கி ஓடுகிறார்கள். கூலிப்போ, பூலிப்போ அதனை பல மாணவர்கள் பயன்படுத்துவதாக செய்தியைக் கேட்டு மனம் பதைக்கிறது.
காந்தி ஜெயந்தி அன்று கூட மது கிடைப்பதாக மதுப்பிரியர்கள் சொல்லி மகிழ்கிறார்கள்.
கல்வி கற்க இவ்வளவு கட்டுப்பாடுகளும், மிரட்டல்களும் அவசியம் இல்லை என்பது என் கருத்து.
விடுமுறை நாளில் வகுப்பு நடத்திய ஒரு பள்ளி நிர்வாகியை ஜெம் வீரமணியை விசாரிப்பதைப்போல் விசாரித்து மிரட்டுகிறார்கள். இனி இந்தத் தவறை செய்ய மாட்டேன் என பள்ளி நிர்வாகம் எழுதித் தருகிறது.
பல அரசுப் பள்ளிகளில் மாலை நேர மற்றும் இரவு நேர வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் தாங்கள் பெற்றெடுத்த பிள்ளையை விட பத்திரமாக, அன்பாக, கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் வசதி வாய்ப்பு இருப்பதால் அவர்களின் வாழ்வியல் முறையில் மோசமான மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று தான் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதுவும் வரவேண்டும் எனக் கட்டாயமில்லை. பெற்றோர்கள் அதை விரும்புகிறார்கள். சில பெற்றோர்கள் அதனை விரும்புவதில்லை.
ஹாஸ்டல் வசதியோடு கூடிய பள்ளிகளில் 24/ 7 படிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.
விளையாட்டு வகுப்புகளை அதிகப்படுத்துகிறார்கள். மகிழ்ச்சி தான். பல பள்ளிகளில் மைதானமோ, விளையாட்டு ஆசிரியர்கள் இல்லையே.
அதிரடியாக எதையாவது சொல்ல வேண்டும் எனபதற்காக அறிவிப்புகள் வெளியிடுவது கல்விச் சூழலுக்கு நல்லதல்ல.
கடந்த ஆட்சியில் உயர்கல்வியில் உச்சம் தொட்ட தமிழகம் இப்போது சதவிகிதக் கணக்கில் குறைத்திருக்கிறது.
அது போன்ற விசயங்களிலும், உட்கட்டமைப்பிலும் கவனம் செலுத்தலாம்.
சிறப்பு வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை என்பது வருத்தத்திற்குரியது.
மாணவர்களின் எதிர்கால நலனுக்காக, பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக, மாணவர்களை மார்ச் மாதம் வரை ஆரோக்கியமான மன நிலையில் வைத்திருப்பதற்காக, நல்ல மதிப்பெண் எடுத்து, நல்ல கல்லூரியில் சேர்ந்து, மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்ற வேட்கையும் விருப்பமும் காரணமே தவிர சிறப்பு வகுப்புகளுக்கு வேறு காரணங்கள் இல்லை.
வகுப்பறைகளே பாதுகாப்பானவை. வெளி உலகம் ஆரோக்கியமானதாக இல்லை.
கட்டுரையாளர்:
தங்கம் மூர்த்தி




