Close
அக்டோபர் 24, 2026 5:07 காலை

வீணாகும் பூக்களில் இருந்து சாம்பிராணி உற்பத்தி: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு புதிய முயற்சி

நாமக்கல் மாநகராட்சி மூலம் மகளிர் குழுவினருக்கு வீனாகும் பூக்களில் இருந்து கப் சாம்பிராணி தயாரிக்கும் தொழில் நிறுவனம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாநகராட்சியின் உதவியுடன், சர்வம் கல்வி அறக்கட்டளை, ஸ்ரீ அம்மன் மகளிர் குழு மற்றும் பாரதிய கிசான் சங்கம் ஆகியவை இணைந்து, பூக்களின் கழிவுகளிலிருந்து கப் சாம்பிராணி தயாரித்தல் மற்றும் மூலிகைத் தோட்டம் அமைத்தல் திட்டத்தின் தொடக்க விழா, கொசவம்பட்டியில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி புதிய திட்டத்தை துவக்கி வைத்துப் பேசியதாவது: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில், சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு பின்னர் அகற்றப்படும் பூக்கள் மற்றும் பூ மார்க்கெட்டில் விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் கழிவுப் பூக்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து கப் சாம்பிராணி தயாரிக்கப்படுகிறது.

இதன் மூலம் பூக்கழிவுகள் வீணாகாமல் மீண்டும் பயன்படுத்தப்பட்டு, விற்பனைக்கான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்படுகின்றன. இத்திட்டத்திற்குத் தேவையான கப் சாம்பிராணி தயாரிக்கும் இயந்திரத்தை ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி வழங்கியுள்ளார்.

கழிவுகளை வளமாக மாற்றும் இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதாரச் சுழற்சியை உருவாக்கும். இயற்கை வளங்களைப் பயனுள்ள பொருட்களாக மாற்றுவதன் மூலம் கழிவுகளைக் குறைத்து, நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், வருமானத்தை உயர்த்துதல், கப் சாம்பிராணி மற்றும் பிற இயற்கை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துதல், மூலிகைத் தோட்டங்களை அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர்.

எதிர்காலத்தில் பல்வேறு வகையான கழிவுகளிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து, அவற்றைச் சந்தைப்படுத்தும் புதிய திட்டங்களையும் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் அம்சா, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் சுப்பிரமணி, பாஸ்கர், ஜான் ராஜா, நந்தினி, செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top