நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில், 90,703 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தேசிய அளவில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு முகாம் வருகிற 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. வைட்டமின் ஏ கண் விழித்திரைக்கு தேவைப்படும் முக்கிய உயிர்ச்சத்து ஆகும்.
வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் பல்வேறு கண் நோய்கள், மற்றும் வளர்ச்சி குறைபாடு, சுவாசக்குழாய் நோய்த்தொற்று, செரிமான மண்டல நோய்த்தொற்று, தட்டம்மை, மலட்டுத்தன்மை, தோல் பிரச்சனைகள் ஏற்படும்.
வைட்டமின் ஏ குறைபாட்டினால் ஏற்படும் பார்வையிழப்பை தடுப்பதற்காக ஆண்டு தோறும், 6 மாதத்திற்கு ஒரு முறை மொத்தம் 2 முறை, இலவசமாக வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது.
6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வருகிற 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மாவட்டத்தில் மொத்தம் 90,703 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
6 மாதம் முதல் 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 1 சொட்டு மற்றும் 12 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 சொட்டு வீதம், கிராம நகர சுகாதார நர்சுகள், அங்கன்வாடி பணியாளர், ஏஎன்எம் பணியாளர், இரண்டாம் ஆண்டு நர்சிங் பயிற்சி மாணவியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் மூலம் அங்கன்வாடி மையங்களில் வைத்து வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.
மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தங்கள் வீடுகளின் அருகில் உள்ள, அங்கன்வாடி மையங்களுக்கு 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அழைத்துச்சென்று வைட்டமின் ஏ திரவம் வழங்கி, வைட்டமின் ஏ குறைபாடு இல்லாமல் தடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




