Close
அக்டோபர் 24, 2026 5:06 காலை

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என, நாமக்கல் எம்எல்ஏ., திலீப் கூறினார்.

நாமக்கல் நகரில் மோகனூர் ரோட்டில் செயல்பட்டு வந்து மாவட்ட அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அருகில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. நகரின் மையத்தில் செயல்பட்ட அரசு மருத்துவமனை சுமார் 10 கி.மீ., தூரம் சென்றதால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதனால், பழைய அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தாலுகா மருத்துவமனை துவக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதையடுத்து, நாமக்கல் – மோகனூர் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, ரூ. 50 லட்சம் மதிப்பில், மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், அதற்கான பராமரிப்பு பணி துவக்க விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., திலீப், மாநகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, எம்.எல்.ஏ., திலீப், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 50 லட்சம் மதிப்பில், பழைய மருத்துவமனை கட்டிடத்தைச் சீரமைத்து, புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிகளுக்காக சி.எஸ்.ஆர். நிதியின் கீழ், யுனைடெட் வெல்பேர் டிரஸ்ட் அமைப்பு உதவ முன்வந்துள்ளது. மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்போது, விபத்து, விஷம் அருந்துதல், நாய்க்கடி, பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகள், 24 மணி நேரமும் வழங்கும் வகையில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிகள், இரண்டு மாதங்களில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். வரும், 2027ம் ஆண்டு துவக்கத்தில், முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top