திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் காணாமல் போன அரசுப் பள்ளி மாணவிகள் 3 பேரை காவல்துறையினர் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மீட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்காள் – தங்கை உட்பட 3 பள்ளிச் சிறுமிகள் நேற்று முன்தினம் மாயமாகினர். இந்தச் சிறுமிகளின் பெற்றோர்கள் கேரளாவில் கிணறு வெட்டும் வேலைச் செய்வதால், உள்ளூரில் பாட்டியின் அரவணைப்பில் இருந்தனர்.
நேற்று பள்ளி சென்ற இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு உறவுக்கார சிறுமி என மொத்தம் 3 மாணவிகள் (8,9,10 ஆம் வகுப்பு) வீடு திரும்பவில்லை என தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளில் தேடியும், அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி காவல்துறையினர் வழக்கு பதிந்து, சிறுமிகளை தேடி வந்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மாணவிகளின் தாய் ஜோதி கைப்பேசியில் தொடா்புகொண்டு பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல வேண்டும் என திட்டியதும், மாணவிகளின் மூத்த சகோதரி பாரதியை போன்று படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
மாயமான மாணவிகள் கையில் கைப்பேசி உள்ள நிலையில், அவை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் மாணவிகள் இருக்கும் இடம் தெரியவில்லை. எனினும் மாணவிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனா்.
ஏற்கெனவே செஞ்சியில் பள்ளி மாணவி மாயமாகி 16 நாள்கள் ஆகியும் தேடிவரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதேபோன்று 3 மாணவிகள் காணாமல் போன சம்பவம் கிராம மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், மாயமான மாணவிகள் 3 பேரையும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்ட காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.




