சேலம் மாவட்டத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு, கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி அரசு உத்தரவு வெளியிடப்பட்டது. மாவட்டம் துவங்கி 30 ஆண்டுகள் நிறைவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாமக்கல்-30 விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விழா ஏற்பாடுகள் குறித்து, தெற்கு பள்ளியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் இது தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்விற்கு தகுதி பெற்ற, மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டமானது தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பயிற்சி வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 55 மாணவர்கள் வீதம், 15 ஒன்றியங்களில் இருந்து மொத்தம் 825 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 15 ஒன்றியங்களிலும் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்வை எழுதுவதன் மூலம் மற்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை கிடைக்கும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும். எனவே, அனைவரும் சிறப்பாக பயிற்சி பெற வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் கோட்டாட்சியர் சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் மாதவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சரவணன், மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




