Close
நவம்பர் 26, 2026 6:43 மணி

நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூடங்களை துவக்கி வைத்த ஆட்சியர்

நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூடங்களை துவக்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் நடமாடும் உணவுப் பகுப்பாய்வு கூடங்களை மாவட்ட ஆட்சியர் வந்தனாகார்க் துவக்கி வைத்தார்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தரமான, பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருவண்ணாமலையில் 3 நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூடங்களை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

சென்னை, சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள இந்த 3 நடமாடும் ஆய்வக வாகனங்கள், திருவண்ணாமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர உணவு மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளன.

குறிப்பாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலைச் சுற்றியுள்ள உணவகங்கள், கடைகள் மற்றும் அன்னதானக் கூடங்களில் வழங்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து உடனடி பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்த ஆய்வகங்களில் உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், இதர தரக்குறைபாடுகள் மற்றும் கலப்படங்கள் குறித்தும் துல்லியமாகப் பரிசோதிக்கப்படும்.

இதில் குறைபாடுகள் இருப்பின் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த 3 நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூடங்கள் எதிர்வரும் 25.11.2026 வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து செயல்படும் என உணவுப்பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் மரு. பானு சுஜாதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top