நவம்பர் மாதம் 14ம் தேதி தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2175 பள்ளிகளை சேர்ந்த 2 லட்சத்து 35 ஆயிரத்து 722 மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து அட்டைகள் மற்றும் கேக்குகளும், 12 ஆயிரத்து 563 ஆசிரியர்களுக்கும், 862 அலுவலர்களுக்கும் கேக்குகள் வழங்கப்பட்டது. மேலும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
ஆவாரங்காட்டு தெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கலை திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், சமூக நல இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வழங்கினார்கள்.
முன்னதாக துரிஞ்சாபுரம் ஒன்றியம், தீபம் நகரிலுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் வடஆண்டப்பட்டு ஊராட்சியிலுள்ளசேரியந்தல் அங்கன்வாடி மையத்திலும் குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் செய்யப்பட்டதை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுலவர் முனிராஜ், மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.





