Close
நவம்பர் 26, 2026 5:25 மணி

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கோரிக்கை

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்களை இயக்கவேண்டும் என, மாதேஸ்வரன் எம்.பி., மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன், மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு யாத்திரை காலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான ஐயப்ப பக்தர்கள், கேரள மாநிலம், சபரிமலைக்கு செல்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, காட்பாடி, நாமக்கல், மதுரை, செங்கோட்டை வழியாக, சென்னை மற்றும் கொல்லம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். கிறிஸ்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறைகள் நெருங்கி வருவதால், குறிப்பாக, கேரளாவிற்கு பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயணத்தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தீபாவளி பண்டிகை காலத்தின்போதுகூட, மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து, சேலம் – நாமக்கல் – கரூர் வழித்தடத்தை இணைக்கும் வகையில், எவ்வித சிறப்பு ரயில்களும் இயக்கப்படவில்லை. இதனால், நாமக்கல் பகுதியில் உள்ள பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

நாமக்கல், மதுரை, செங்கோட்டை வழியாக இயக்கப்படும், சென்னை – கொல்லம் – சபரிமலை சிறப்பு ரயில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு நேரடி ரயில் இணைப்பை வழங்குவதுடன், நாமக்கல், சேலம், கரூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பயணிகளுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

இவ்வழித்தடத்தின் முக்கியத்துவத்தையும், பயணிகளின் தேவையையும் கருத்தில் கொண்டு, தற்போதைய சபரிமலை யாத்திரை காலம் மற்றும் வரவிருக்கும் பண்டிகை விடுமுறை நாட்களில், சென்னை – கொல்லம் இடையே சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இத்தகைய சிறப்பு ரயில் சேவைகள் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குப் பெரும் உதவியாக இருப்பதுடன், ஏற்கனவே இயங்கி வரும் ரயில்களில் பயணிகள் நெரிசலைக் குறைக்கவும், இவ்வழித்தடத்தில் ரயில் வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளுக்கு, மேம்பட்ட ரயில் இணைப்பை வழங்கவும் உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top