Close
நவம்பர் 28, 2026 10:12 காலை

திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்புப் பணி: 130 மத்திய துணை ராணுவப் படையினர் மதுரை வருகை.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல் கட்டமாக 130 மத்திய துணை ராணுவப் படையினர் மதுரை வந்தடைந்துள்ளனர்.

கோவையிலிருந்து மத்திய ரிசர்வ் காவல் படையின் 105-வது பிரிவைச் சேர்ந்த கலவரத் தடுப்புப் படையான ‘ரேபிட் ஆக்‌ஷன் ஃபோர்ஸ் வீரர்கள் 130 பேர் மதுரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இப்படைப் பிரிவின் இரண்டாவது கமாண்டன்ட் சுனில் குமார் (SP அந்தஸ்து) தலைமையில், ஒரு துணைக் கமாண்டன்ட் மற்றும் ஒரு உதவி கமாண்டன்ட் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழுவினர், மதுரை தனக்கன்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

​இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து துணை ராணுவப் படை அதிகாரிகள் ஆலோசித்தனர். அதனைத்

தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா மற்றும் தீபத்தூண் அமைந்துள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று துணை ராணுவப் படையினர் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் எத்தனை வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் பகுதிகளுக்குள் கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழையாத வகையில், இன்று அதிகாலை முதலே போக்குவரத்துக் காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்துத் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top