தென்காசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பாளர் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றுவதற்காக வருகை தந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோஷ்டி பூசல்கள் இல்லாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கும் நோக்கில், வெளிமாநிலப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக முன்னாள் மாவட்டத் தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனத் தொல்லியல் துறை தெரிவித்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், தொல்லியல் துறை தற்போது பாஜகவின் முழுக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் அரசியல் குரலைப் பாதிக்கும் என்பதால், ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடித்தோம். ஆனால், தற்போது பாஜக குதிரை பேரம் மூலம் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை உடைத்து வருகிறது; அக்கட்சிக்கு இன்னும் 36 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும்போது எந்தெந்த கட்சிகள் நிலைப்பாட்டை மாற்றுகின்றன என்பது தெரியவரும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அண்மைக்கால எக்ஸ் தளப் பதிவுகளைப் பார்க்கும்போது, இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்க திமுக தயாராகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. திமுக ஏன் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குகிறது என்பது கேள்வியாக உள்ளது. இந்தச் சட்டத்தை யார் ஆதரித்தாலும் அது தமிழ்நாட்டுக்குச் செய்யும் மாபெரும் துரோகம்; துரோகம் செய்பவர்களைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள ஆறு தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும், தவெக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் புகார் வந்தவுடன் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளார். குற்றங்களே இல்லாத தமிழ்நாடு என்பதே இலக்காக இருந்தாலும், அதனை அடைவதற்கான பாதை கடினமானது. அதற்காகத் தொடர்ந்து அதிகமாக உழைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு கமிட்டித் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமது மீர், மாநிலப் பொதுச் செயலாளர் எம்.எஸ். காமராஜ், முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு, தென்காசி மாவட்டத் தலைவர் செல்வராஜ், நெல்லை மாவட்டத் தலைவர்கள் ராமேஸ்வரன், துரை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.




