Close
செப்டம்பர் 28, 2026 10:02 மணி

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட 8 வயது ஆண் யானை: பொன்னாடை, மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு

யானையை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அருகில் இணை ஆணையர் பரணிதரன்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 1995-ம் ஆண்டு ருக்கு என்ற பெண் யானை வழங்கப்பட்டது. அன்று முதல் அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான கார்த்திகை தீபம், சித்திரை வசந்த உற்சவம், தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விழாக்களில் கலந்துகொண்டு ஆன்மீக தொண்டுகளை செய்து வந்தது.

மேலும் கார்த்திகை தீபத்திருவிழா போன்ற விழாக்காலங்களில் அருணாசலேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்லும் போது உற்சவங்களுக்கு முன்பு யானை ருக்கு கம்பீரமாக மாட வீதிகளில் வலம் வருவதும் வழக்கம். மகா தீப விழாவின் போது தீப கொப்பரையை யானை ருக்கு ஆசீர்வதித்த பிறகு தான் 2,668 அடி மலை உச்சிக்கு தூக்கி சென்று மகா தீபம் ஏற்றுவார்கள்.

இந்த நிலையில் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி கோவில் வளாகத்தில் யானை ருக்கு இறந்தது. பின்னர் கோவில் அருகிலேயே ருக்குவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சிவத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மீண்டும் யானை கொண்டு வர வேண்டும் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

யானை ருக்கு இறந்து சுமார் 8 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆண் குட்டி யானை கொண்டு வரப்பட்டது. அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தில் ஏற்றி கொண்டு யானை நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. 8 வயதுடைய இதன் பெயர் ஹீராலால் ஆகும். இந்த யானை 6 அடி உயரம் கொண்டது.

சிறப்பு பூஜை

திருக்கோவிலின் ராஜகோபுரம் எதிரே அமைந்துள்ள 1 6 கால் மண்டபத்திற்கு வந்தடைந்த ஆண் யானை ஹிராலாலுக்கு திருக்கோவில் சிவாச்சாரியார்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து ஆகம விதிப்படி சிறப்பு பூஜை செய்து திருக்கோவிலுக்குள் திருமஞ்சன கோபுர வாயில் வழியாக அழைத்துச் சென்று, கோவிலின் வடக்கு திசையில் லாரியில் இருந்து கீழே இறக்கினர்.

தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் சூழ உற்சாகத்துடன் நடந்து சென்று யானைக்காக பிரத்யேகமாக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் வந்த யானை திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கரும்பை லாவகமாக உண்டது.

அருள்மிகு அண்ணாமலையார் ஆலயத்திற்கு புதிய வரவான யானையை வரவேற்று பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் திருக்கோவில் இணை ஆணையர் பரணிதரன், அறநிலையத்துறை அலுவலர்கள் சிவாச்சாரியார்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top