Close
அக்டோபர் 3, 2026 10:07 மணி

நாமக்கல்லில் 600 கிலோ எடையில் கோயில் மணி: 20 தொழிலாளர்கள் 40 நாட்களில் தயாரிப்பு

நாமக்கல்லில் 600 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கோயில் மணி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த மணி பரமத்தி வேலூர் அருகே உள்ள, பில்லூர் படைவெட்டி அம்மன் கோயிலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல் முல்லை நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் கோயில்களுக்கு மணி, குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தி ராமர் கோயிலுக்கு 1,000 கிலோ எடை கொண்ட ராட்சத மணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய வகையான மணிகள் தயார் செய்து அனுப்பி வைத்தார். இவை நாமக்கல்லில் தயார் செய்யப்பட்டு லாரிகள் மூலம் அங்கு கொண்டு செல்லப்பட்டன.

தற்போது 600 கிலோ எடை கொண்ட மணி ஒன்றை, பரமத்தி வேலூர் அருகே பில்லூர் படைவெட்டி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக, ஆர்டரின் பேரில் தயார் செய்துள்ளார். இந்த பிரம்மாண்ட மணி சிறப்பு பூஜை செய்து பில்லூர் படைவெட்டி அம்மன் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மணி தயாரித்த காளிதாஸ் கூறியதாவது: எனது தந்தை ராஜேந்திரன் கோயில்களுக்கு மணி தயாரித்து வழங்கி வந்தார் அந்தப் பணியை தற்போது நான் எனது குடும்பத்தினருடன் இணைந்து செய்து வருகிறேன். கோயில் மணிகள் தயாரிப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறோம்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு 1000 கிலோ எடை கொண்ட மணி தயார் செய்து அனுப்பி வைத்தோம். தற்போது பில்லூர் படைவெட்டி அம்மன் கோயிலுக்கு 600 கிலோ எடை கொண்ட கோயில் மணி தயாரிக்கப்பட்டுள்ளது. மணி தயாரிப்பு பணியை 20 தொழிலாளர்கள் 40 நாட்களில் தயார் செய்து முடித்தோம்.

ரூ. 32 லட்சம் மதிப்பிலான பித்தளை, துத்தநாகம், வெள்ளியீயம், செம்பு மற்றும் இரும்பு ஆகிய உலோகங்களைக் கொண்டு மணி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மணியின் ஓசை குறைந்தபட்சம் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு எதிரொலிக்கும். மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினருக்கும் ஆலயமணிகள் தயார் செய்து வழங்கி வருகிறோம் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top