பெயரளவுக்கு குறைதீர் கூட்டம் நடத்தப்படுவதாக புகார் எழுப்பிய மாற்றுத்திறனாளிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. டிஆர்ஓ சரவணன் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். கூட்டம் காலை 11 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்த நிலையில் 11 மணிக்கு பின் வந்த மாற்றுத்திறனாளிகள் பலரும் கூட்டத்தில் கலந்து கொள்ள இயவில்லை. இதைக்கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களது நீண்ட நாள் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுபற்றி கேட்டால் நீங்கள் விரைந்து கூட்டத்திற்கு வர வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
எங்களால் எப்படி வர முடியும்? மதியம் 1 மணி வரை கூட்டம் நடத்தியிருந்தால் எங்களது குறைகளை தெரிவிக்க வாய்ப்பாக அமைந்திருக்கும். பெயரளவுக்கு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும் என்றனர்.
அவர்களை சமரசம் செய்த அதிகாரிகள், டிஆர்ஓவிடம் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என அறிவுறுத்தினர். இதையேற்று மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




