Close
அக்டோபர் 9, 2026 10:14 மணி

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை: கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் தகவல்

தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அக். 2வது வெள்ளிக்கிழமை சர்வதேச முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்தில் சர்வதேச முட்டை தின விழா நடைபெற்றது.

சங்க தலைவரும், நாமக்கல் மண்டல என்இசிசி தலைவருமான பொன்னி சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களுக்கு, வேகவைத்த 10 ஆயிரம் முட்டைகளை இலவசமாக வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவியபோது, டாக்டர்களின் பரிந்துரையின்பேரில், இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் அதிக புரதச்சத்து கொண்ட கோழி முட்டைகளை அதிக அளவில் சாப்பிட்டு தங்கள் உடலில் ஏற்பட்ட புரோட்டின் குறைபாட்டை சரிசெய்துகொண்டனர்.

அதன் பிறகு கடந்த 6 ஆண்டுகளாக பொதுமக்களிடம் முட்டை சாப்பிடும் வழக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தனி மனிதர் ஆண்டுக்கு 110 முட்டை சாப்பிட்டு வந்த நிலை மாறி தற்போது 180 முட்டைகள் சாப்பிடுகின்றனர்.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் தனி மனிதர் ஒரு ஆண்டுக்கு சுமார் 200 முட்டைகள் வரை சாப்பிடுகின்றனர். நாள் ஒரு முட்டை சாப்பிட்டால் நலமுடன் வாழலாம், நாளுக்கு இரண்டு முட்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேலும் மேம்படும்.

இந்தியாவில் சில இடங்களிலும், உலக அளவில் சில நாடுகளிலும் அவ்வப்போது பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படுகிறது. சில நாட்டுக்கோழிப் பண்ணைகளிலும், காகம், வாத்து போன்ற பறவைகளுக்கும் இந்த நோய் தாக்கம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் அனைத்தும் விஞ்ஞான முறைப்படி கேஜ் முறையில் அமைக்கப்பட்டு பயோ செக்யூரிட்டி முறையில் பராமிக்கப்படுகிறது. இதனால் நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை.

சுகாதாரமான முறையில் தரமான முட்டை உற்பத்தி செய்வதால் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே பொதுக்கள் கலப்படமில்லாத புரதச்சத்துமிக்க முட்டைகளை அச்சமின்றி சாப்பிடலாம் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் இளங்கோ, முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தன், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top