நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழாவில் பராசக்தி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை வழிபட்டனர்.
அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழாதொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் பராசக்தி அம்மன் திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது.
உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து பராசக்தி அம்மன் அலங்காரத்தில் ழுந்தருள , சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சோடச உபசாரம் எனும் 16 வகை தீபாராதனை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர்.
மேலும் திருவண்ணாமலையில் உள்ள ஶ்ரீ துர்க்கை அம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், உள்ளிட்ட கோயில்களில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கியது
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில்
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழாவானது, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த விழாவின்போது சுவாமிகளின் அருள் வேண்டிய பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள், பூஜைகள் மற்றும் அன்னதானம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இவ் வருடத்திற்கான நவராத்திரி விழா 11 ஆம் தேதி முதல் துவங்கி அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 11 ஆம் தேதி நவராத்திரி முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக துவங்கியது. தினசரி காலை சிறப்பு வேள்வியும் ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் ஸ்ரீ மானசாதேவி திருமேனிகளுக்கு சிறப்பு வழிபாடும் தினமும் மாலை அம்பாலின் 9 அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக ஒன்பது நாட்களிலும் ஒன்பது அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து இன்னிசை கச்சேரியுடன் மகா ஆரத்தி சிறப்பு அன்னதானம் நடைபெற்று வருகிறது.
மேலும் அக்டோபர் மாதம் 20-ம் தேதி காலை 8.30 மணிக்கு மகா சண்டி ஹோமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.





